நெல்லை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சில நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலைய உள் வளாகத்தில் பேருந்தில் பயணித்தார். அப்போது, அதே பேருந்தில் பயணித்த அமமுக பிரமுகர் ராஜேஷ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு பரப்பும் விதமாக கோஷமிட்டதோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டிருந்தார்.
அப்போது இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் செல்போனை தட்டிவிட்டுள்ளார். இது தொடர்பாக, ராஜேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், போலீசார் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் (மார்ச்.15) நடைபெற்றது.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர் அப்போது அனைவரும் திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்காக மாவட்ட செயலாளர் மூலம் 100க்கும் மேற்பட்ட அதிமுக கொடிகள் கொண்டுவரப்பட்டன ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், ஒரு சிலர் மட்டுமே கட்சி கொடியை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய தச்சை கணேசராஜா, 'மதுரை விமான நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி வந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் யரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அவரை அசிங்கப்படுத்தும் நோக்கில் நடந்து கொண்டார். அவதூறு பரப்பும் விதமாக, மொபைலில் வீடியோ, போட்டோ என எடுத்தவரை ஏன் இப்படி செய்றீங்க என்று கேட்ட பிஎஸ்ஓ (Personal Security Officer - PSO) தட்டிக்கேட்டுள்ளார். அவர் தமிழ்நாடு காவல்துறை அதிகாரியாக உள்ள அவர் ஒன்றும் தனிப்பட்டவர் கிடையாது; அவர் அந்த மொபலைப் பிடுங்கி விமான நிலைய அதிகாரிகளிடம் அதனை ஒப்படைத்து நடந்தவற்றை விளக்கி கூறியுள்ளார்.
பின்னர், தனது செல்போனை அபகரித்து விட்டு சென்றதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுவொரு பொய்யான புகாராகும். இந்த பொய்யான புகாரில் உள்ள உண்மை தன்மையை விசாரிக்காமல், முன்னாள் முதலமைச்சராகவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ள எடப்பாடி பழனிசாமி மீது ஒரு அவதூறான புகாரை போட்டுள்ளனர். எனவே, இதற்கு கண்டனம் தெரிவிக்கவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும், இந்த வழக்கை ரத்து செய்யவில்லை எனில் பெரும் போராட்டங்கள் நடத்தப்படும்' என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொடியை கையில் எடுக்க மனம் இல்லாமல் இருந்தனர். இதனால், மீதமுள்ள கட்சி கொடிகள் ஆர்ப்பாட்ட பகுதிக்கு எதிரே மலைபோல், குவித்து வைக்கப்பட்டிருந்தன. நீண்ட நெடிய வரலாறு கொண்ட அதிமுக கட்சி சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் கட்சி கொடியை கையில் ஏந்த தயங்கிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 90 சதவீதம் பேர் தங்கள் சட்டை பையில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் உருவ படத்தை மட்டுமே வைத்திருந்தனர். மாவட்ட செயலாளர் உள்பட முக்கிய நிர்வாகிகள் சட்டைப்பையில் எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெறவில்லை. ஏற்கனவே, பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அதிமுக கட்சியை எடப்பாடி பழனிசாமி தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இருப்பினும் ஒருபுறம் கட்சியை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். இதுபோன்ற சூழ்நிலையில் நெல்லை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள் சட்டை பையில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டைப் பையில் மட்டும் தான் இடமில்லையா அல்லது அதிமுக நிர்வாகிகளின் மனதிலும் எடப்பாடி பழனிசாமிக்கு இடம் இல்லையா என்ற கேள்விக்குறியும் சாதாரண தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானாலும் கூட, தற்போது வரை அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தான் இருந்து வருகிறார்.
எனவே, அடுத்தடுத்து கட்சியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது அதிமுகவினருக்கு பெரும் குழப்பமாகவே இருந்து வருகிறது. எனவே, கட்சியின் தலைமை மாறினால் அதற்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே நெல்லையில் அதிமுக நிர்வாகிகள் செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதையும் படிங்க: புக்கர் பரிசு பட்டியலில் 'பூக்குழி' தமிழுக்கு கிடைத்த பெருமை!