நாங்குநேரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து வெற்றி விழா பொதுக்கூட்டம் நாங்குநேரி உச்சினிமகாளி அம்மன் கோயில் முன்பு நடைபெற்றது.
இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, வளர்மதி, சரோஜா, வெல்லமண்டி நடராஜன், ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ”மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்ததற்கு எதிர்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிமுக மீது வைத்தார்கள். அதிமுக எட்டு ஆண்டுகளில் என்ன திட்டங்களைச் செய்தார்கள் என ஸ்டாலின் கேட்டார்.
நாங்கள் என்ன செய்தோம் என்பதை மக்களிடம் எடுத்து சொன்னோம். அதற்காகதான் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி எங்களுக்கு கிடைத்தது.
அதிமுகவிற்கு வெற்றியைத் தந்த இந்த இரண்டு தொகுதிகளையும் சொர்க்க பூமியாக மாற்ற திட்டங்களைக் கொண்டுவருவோம். நாங்கள் ’சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம்’. இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வர உள்ளது. இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகவுக்குதான் வெற்றி கிடைக்கும் என்பதை நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி நிரூபித்துள்ளது " என்றார்.
மேலும் படிக்க : 'உள்ளாட்சித் தேர்தலை நடக்கவிடாமல் செய்ய ஸ்டாலின் சதி' - அமைச்சர் கே.சி.வீரமணி !