சென்னை: தாம்பரம் மாநகராட்சி புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சி முதல், பெண் மேயராக வசந்தகுமாரியும், துணை மேயராக கோ. காமராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தநிலையில் தாம்பரம் மாநகராட்சியின் முதல் கூட்டம் இன்று மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ. காமராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல் தீர்மானமாக மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சாதாரண கூட்டமாக 171தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவசர தீர்மானமான 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்தும் தாம்பரம் மார்க்கெட் வியாபாரிகள் கடைகள் அகற்றபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் தலைமையில் அதிமுக கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் 9 பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து கோஷமிட்டபடி வெளியில் வந்தனர்.
கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் முன்பு அவர்கள் வார்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வை கண்டிக்கும் விதமாக அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் கறுப்புச் சட்டை அணிந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பெரும்பாலான பணிகள் செய்யப்படவில்லை என அடிக்கடி தெரிவித்து வந்த நிலையில் இதற்கு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவரிடம் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அதிமுக கவுன்சிலர் அவரது கோரிக்கையை தெரிவிக்கும்போது கோவை மாநகராட்சியில் மக்களிடம் வரி வசூல் ஆனது சில இடங்களில் மிரட்டி பெறப்படுகிறது எனத் தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக கவுன்சிலர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரை திமுக கவுன்சிலர் செல்வா தள்ளிவிட்டு தாக்குதல் நடத்த முற்பட்டார். இதனை அடுத்து அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் வெளிநடப்பு செய்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றதில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 51 வார்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக சார்பில் மாநகராட்சி மேயராக சரவணன் துணை மேயராக ராஜூ பொறுப்பேற்றுக் கொண்டனர். தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு நான்கு மண்டல குழு தலைவர்களும் பொறுப்பேற்ற நிலையில் நெல்லை மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர் அதேபோல் சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் பெண்கள் 2 பேர் உள்பட 3 பேர் கறுப்புச் சட்டை அணிந்தபடி மன்றக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் சரவணன் ஆணையர் விஷ்ணு சந்திரன் துணை மேயர் ராஜூ ஆகியோர் மேடையில் வந்து அமர்ந்தனர்.
அப்போது மேயர் சரவணன் திருக்குறள் வாசித்தபடி அவையில் தனது கன்னி பேச்சை தொடங்கினார். பின்னர் முதலமைச்சர், அமைச்சர் உள்பட பலருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்களை மேயர் வாசித்துக் கொண்டிருக்க கறுப்புச் சட்டையுடன் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர்கள் 3 பேரும் கையில் மனுவுடன் மேடை முன்பு வந்து நின்றனர். இதை கவனித்த மாநகராட்சி ஆணையர் சரவணன் இருக்கையில் அமரும்படி அதிமுக உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய அதிமுக
ஆனால் அவர் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் மேயர் முன்பு நின்று கொண்டிருந்தனர். பின்னர் தீர்மானங்கள் வாசித்து முடித்த உடனே கையிலிருந்த மனுவை மேயரிடம் வழங்கிவிட்டு மேயர் மற்றும் ஆணையர் முன்பு தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவையில் அதிமுக உறுப்பினர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் 3 பேரும் மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து அதிமுக உறுப்பினர் சந்திரசேகர் கூறுகையில், “தமிழ்நாடு அரசு சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியுள்ளது. 75 முதல் 100 விழுக்காடு வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து அதிமுக சார்பில் வெளிநடப்பு செய்துள்ளோம். எங்கள் தலைவர்களின் ஆலோசனைப்படி போராட்டம் தொடரும்” என்றார். இதற்கிடையில் எதிர்க்கட்சியினர் இல்லாமல் தொடர்ந்து மேயர் தலைமையில் மன்ற கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: 'நீங்கள் இப்படித்தான் ஆரம்பிப்பீங்க' - பாஜகவுக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!