திருநெல்வேலி: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், இந்தியா கூட்டணி உருவாக்கம் என பல்வேறு பரபரப்புகளை உள்ளடக்கியதாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாகக் கடந்த சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் தடம் பதிக்க வேண்டும் என்ற முனைப்போடு மத்தியில் ஆளும் பாஜக காய் நகர்த்தி வருகிறது.
அதே சமயம், தமிழகத்தில் பாஜகவை நுழைய விடக்கூடாது என்பதில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. யாரும் எதிர்பாராத விதமாகப் பல ஆண்டுகளாக நீடித்த அதிமுக - பாஜக கூட்டணியும் சமீபத்தில் முறிவடைந்தது. எனவே, தமிழகத்தில் பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமையலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இதற்கிடையில், சினிமா உலகில் கொடி கட்டி பறக்கும் நடிகர் விஜய் எந்நேரமும் அரசியல் குதிக்கலாம் என்ற நிலையும் உள்ளன. அதற்கு முன்னோட்டமாக, நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்ச்சியாக, பல்வேறு சமூகப் பணிகளை விஜய் முன்னெடுத்து வருகிறார். சமீபத்தில், தமிழகம் முழுவதும் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களை விஜய் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார்.
அப்போது, பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடக்கூடாது என்ற நடிகர் விஜய் பேச்சு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல், தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையில் பரபரப்பு வசனங்களுடன் கூடிய போஸ்டர்களை தொடர்ச்சியாக ஒட்டி வருகின்றனர்.
தற்போது வரை ரசிகர்களின் இந்த நடவடிக்கைக்கு விஜய் தடை போடவில்லை. எனவே, எந்த நேரமும் அவர் அரசியலில் இறங்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. இது போன்ற சூழ்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. ஆடியோ லாஞ்ச் விழா ரத்தானது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆடியோ லாஞ்ச ரத்தானதற்கு பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும், இதை வெறும் சினிமாவிற்கான தடையாகப் பார்க்காமல், தங்கள் தலைவரின் அரசியல் பிரவேசத்திற்குப் போடப்படும் தடையாகவே ரசிகர்கள் கருதுகின்றனர். ஒருபுறம் சினிமா உலகிலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை முன்வைத்து ரஜினி - விஜய் இடையே மறைமுக போட்டி நிலவுகிறது.
சமீபத்தில் நடிகர் ரஜினி நடித்து மிகப்பெரும் வெற்றி அடைந்த ஜெயிலர் படத்தில் வரும் பாடல் காட்சிகளில் தலைவர் களத்துல எப்பவுமே சூப்பர் ஸ்டாருடா, உன் அலும்ப பார்த்தவன், உங்க அப்பன் விசிலை கேட்டவன் என நடிகர் விஜய்யை மறைமுகமாகத் தாக்கும் வசனங்கள் இடம் பெற்றிருந்தது. எனவே, அரசியல் மற்றும் சினிமா என இரு பாதைகளிலும் நடிகர் விஜய்க்கு கடும் போட்டி நிலவுவதாகவே விஜய் ரசிகர்கள் கருதுகின்றனர். எனவே, நடிகர் ரஜினி மற்றும் தமிழக அரசை மறைமுக தாக்கி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வந்தனர்.
அந்த வகையில், திருநெல்வேலியில், வண்ணாரப்பேட்டை பகுதியில் இன்று (அக்.2) நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், 2026 சைய்ஷா மூவ் பண்றாங்கே, யாருக்கு வேணும் உன் பட்டம் நாங்க போற வழியே வேற, ஆடியோ லான்ஞ் இல்லைனா என்ன? ஆட்சியை பிடிச்சிட்டா போச்சு" என நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள, இந்த அரசியல் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "அரசியல் பாதை கரடு முரடானது; துன்பங்கள் சூழ்ந்தது" - நெல்லையில் வைகோ பேச்சு!