திருநெல்வேலி: தமிழக அரசு நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பேருந்துகளில் பயணிக்கும் கலைஞர்கள் தங்களின் அடையாள அட்டையை காண்பித்து பாதி கட்டணம் செலுத்தி பயணம் செய்யலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது. அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அரசாணையை நடைமுறைப்படுத்துவதில் போக்குவரத்து அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை. மேலும், நடத்துனர்களுக்கு இப்படி ஒரு சலுகை இருக்கிறது என தெரியாமல் கலைஞர்களிடம் வாக்குவாதம் செய்யும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியைச் சேர்ந்த வில்லிசை கலைஞரான பூமிநாதன் வில்லிசை நிகழ்ச்சிக்காக ஆலங்குளம் செல்ல நாகர்கோவிலில் இருந்து பாபநாசம் செல்லும் பேருந்தில் ( வண்டி எண்; TN; 68 N.0703 ) திருக்குறுங்குடியில் இருந்து ஏறியுள்ளார்.
இவர் தனது அடையாள அட்டையைக் காண்பித்து பாதி கட்டணத்தை மட்டும் கொடுத்து நடத்துனரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர் அரசகுமார் சலுகையெல்லாம் கிடையாது முழு கட்டணம் தர வேண்டுமென வாக்குவாதம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பிரச்னை வேண்டாம் என எண்ணி பூமிநாதன் முழு கட்டணத்தையும் கொடுத்துள்ளார்.
அதன்பின், கோபம் அடங்காத நடத்துனர் அரசகுமார் பூமிநாதனை ஒருமையில் திட்டியபடி பணம் மற்றும் டிக்கெட்டை அவரது முகத்தில் வீசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடத்துனரிடம் பூமிநாதன் நியாயம் கேட்டபோது மீண்டும் திட்டியுள்ளார்.
இதை பூமிநாதன் தனது செல்போனில் வீடியோ எடுத்தபோது, யார் யாரை வீடியோ எடுப்பது? எனக் கூறி ஆத்திரத்தில் பூமிநாதனை நடத்துனர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் பெரிதானதும், ஓட்டுனர் களக்காடு காவல் நிலையத்திற்கு பேருந்தை ஓட்டிச் சென்றார். அங்கு காவலர்கள் நடத்துனரை எச்சரித்து அனுப்பினர்.
மேலும், பூமிநாதன் தன்னை தாக்கியதாக நடத்துனர் மீது புகார் அளித்தார். இதற்கிடையில் நடத்துனரிடம் பூமியாதன் முறையீடும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. பூமிநாதன் புகார் மீது காவல்துறையினர் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று நெல்லை மாவட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நெல்லை போக்குவரத்துக் கழக பொது மேலாளரிடம் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தங்களுக்கான பயண கட்ட சலுகையை முறையாக நடைமுறைப்படுத்தக் கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:அவதூறு வழக்கில் கைதான ஆர்பிவிஎஸ் மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!