திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் ராம சுப்பையா. 71 வயதான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமான நிலையில் மீண்டும் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று (டிச.11) நள்ளிரவில் சிகிச்சை பெற்று வந்தவர் புற்றுநோய் பிரிவிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராம சுப்பையா உயிரிழந்த நிலையிலிருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து உடனடியாக உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பாளையங்கோட்டை மேட்டுத்திடல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 71 வயதான ராம சுப்பையா புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புற்று நோய் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஆகாது. எனவே தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக. மேலும் சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் - help@snehaindia.org மற்றும் சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட் 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028 என்ற முகவரியில் நேரில் தொடர்புகொள்ளலாம்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழப்பு!