திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி. இவர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வந்திருந்தார். இதற்கிடையே, கணவன் சமுத்திரபாண்டிக்கும், அவரது மனைவி வெள்ளைதுரைச்சிக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்தது.
இந்நிலையில், நேற்று இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் அரிவாளால் மனைவியை சமுத்திரபாண்டியன் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் வெள்ளைதுரைச்சி பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது தடுக்க வந்த மகள் சிவரஞ்சனி(16) மீதும் வெட்டு விழுந்தது. அவரை அக்கம்பக்கத்தினர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து, ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் புளியங்குடி காவல் நிலையத்தில் சமுத்திரபாண்டியன் சரணடைந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வெள்ளைதுரைச்சியின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புளியங்குடி காவல்துறையினர் சமுத்திரபாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியை வெட்டிக் கொன்று அரிவாளுடன் காவல் நிலையத்தில் கணவர் சரணடைந்த சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.