திருநெல்வேலி: பாளையங்கோட்டை அடுத்த திம்மராஜபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நம்பிராஜன் (30). இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் பெயிண்டிங் வேலைக்குச் சென்றபோது ரயில் விபத்தில் சிக்கி இடது காலை இழந்தார்.
பின்னர் மருத்துவர்கள் அவருக்கு பிளாஸ்டிக் கால் பொருத்தினர். இருப்பினும் பிளாஸ்டிக் காலை வைத்துக் கொண்டு வேலைக்கு எதுவும் செல்ல முடியாது என்பதால் 8 மாதங்களாக நம்பிராஜன் வீட்டிலேயே முடங்கினார். இந்த சூழ்நிலையில் நேற்று (நவ.05) நம்பிராஜன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், நம்பிராஜனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த 8 மாதங்களாக வீட்டில் முடங்கி இருப்பதால் வேலைக்குச் செல்ல முடியாமல் குடும்ப வறுமை காரணமாக நம்பிராஜன் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: மன உளைச்சலால் ஐஏஎஸ் அலுவலரின் மனைவி தற்கொலை!