தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஏழு பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிடக்கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 325 நாள்களாக வீடுகளில் கறுப்புச் சட்டை அணியும் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று நெல்லையில் சுமார் 1000 பேர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில், ஊரடங்கை மீறி பொது இடத்தில் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள குற்றத்திற்காக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஜான்பாண்டியன் உள்பட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் முககக்வசம் சரிவர அணியாமலும், தகுந்த இடைவெளியை பின்பற்றாமலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வேளாண் மசோதாவை திரும்பப் பெறக்கோரி திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பங்கேற்ற எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்பட பலர் மீது இதே காரணத்துக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது