வேலூர்: காட்பாடி அடுத்த வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(41). இவர் காட்பாடி குடியாத்தம் சாலையிலுள்ள காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை (டிச.15) தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து வெங்கடேசன், பல இடங்களில் தேடியும் வாகனம் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல், காட்பாடி அடுத்த தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த கோபர்கட் (59) என்பவரும் தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதாகப் புகார் அளித்திருந்தார்.
பின்னர், இருவர் அளித்த புகாரையும் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இருசக்கர வாகனம் காணாமல் போன சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர். அதனையடுத்து, இருசக்கர வாகனம் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பகுதிகளிலிருந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுவன் என்பது தெரிய வந்துள்ளது. பின்னர், போலீசார் அச்சிறுவனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அச்சிறுவன் இதேபோல் மேலும், 7 இருசக்கர வாகனத்தைத் திருடியதாகக் கூறியுள்ளார்.
அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை அதிகாரிகள், சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டன. பின்னர் அச்சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகளிடம் 20 பவுன் நகைகளை திருடியவர் கைது..!