திருநெல்வேலி: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் வரும் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் தலைமை பொறுப்பிற்கு அடுத்து வரப்போவது யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நெல்லை மாவட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் தலைமையில் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இதுகுறித்து சுதா பரமசிவம் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் 23ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் நெல்லை மாவட்டத்திலுள்ள 61 செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தகுதியானவர். நாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு வலு சேர்ப்போம்.
மொத்தம் 68 மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி தலைமையில் அணிவகுத்து உள்ளனர். சரியான தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என்பதைப் பொதுக்குழுவில் நிருபிப்போம் எனவும், ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமியே பொருத்தமானவர் எனவும் கூறினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு, அமைப்புச் செயலாளர் உட்பட நிர்வாகிகள் அனைவரும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு, நெல்லையிலிருந்து ஏற்பாடு செய்த கார்களில் சென்னை நோக்கிப் புறப்பட்டனர்.
இதையும் படிங்க: நெருங்கும் அதிமுக பொதுக்குழு : எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு...