பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கைதிகளுக்குள் நடந்த மோதலின் போது, விசாரணை கைதியான வாகைகுளத்தை சேர்ந்த முத்து மனோ என்பவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயிரிழந்த முத்து மனோவின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு சுமார் 8 மணி நேரம் மறியல் போராட்டம் நடத்தினர். சிறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர், அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், சிறை அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக சிறைத்துறை உயர் அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, பாளையங்கோட்டை மத்தியச் சிறை துணை ஜெயிலர் சிவன், உதவி ஜெயிலர்கள் கங்காதரன், சங்கரசுப்பு, ஆனந்தராஜ், தலைமை வார்டன் வடிவேல் முருகையா, சிறைக்காவலர் சாம் ஆல்பர்ட் ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சிறைத்துறை டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: சீவலப்பேரி பூசாரி கொலை: கழுத்தை அறுக்க முயன்ற நபரால் பரபரப்பு!