தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிக மது விற்பனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்களில் தமிழ்நாடு முழுதும் சுமார் 600 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. மது விற்பனை ஒருபுறம் ஊக்குவிக்கப்பட்டாலும், விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மது விற்பனையை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை, பிற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தனிப்படை குழு அமைத்து கண்காணித்து வருகிறார். இச்சூழ்நிலையில் கடந்த 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விடப்பட்டது.
இருப்பினும் பலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து, காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது, நான்கு நாட்களில் மட்டும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 307 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 1,768 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கேபிள் டிவி ஆபரேட்டர் கொலை: 9 பேர் கைது