திருநெல்வேலி: டவுன் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு மாணவர்கள் காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய், காயமடைந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையடுத்து நிவாரணத் தொகையை வழங்குவதற்காக சபாநாயகர் அப்பாவு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.
அப்போது திடீரென உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர்.
அப்போது மாணவர் ஒருவரின் உறவினர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து உறவினர்கள் போராட்டம் நடத்திவருவதால் நெல்லை அரசு மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: பள்ளி சுவர் இடிந்து மூவர் பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்!