திருநெல்வேலி: நெல்லை டவுன் பெரிய தெரு பகுதியில் குடியிருந்து வருபவர், கோமதி (82). இவரது கணவர் ராமசாமி மின்வாரியத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் ராமசாமியும், அவரது மகனும் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மூதாட்டி கோமதி நெல்லை டவுன் பெரிய தெரு பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு அக்கம் பக்கத்து வீட்டினர் அவ்வப்போது உதவி செய்து வருகின்றனர்.
எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் மூதாட்டி கோமதியிடம் சுமார் 25 சவரன் தங்க நகைகள் இருந்துள்ளது. இந்த நிலையில், ஜூலை 17ஆம் தேதி கோமதியின் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது மூதாட்டி அவரிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென வீட்டின் முன்பக்க கதவை அடைத்து விட்டு, மூதாட்டி அருகே இருந்த தலையணையை எடுத்து முகத்தில் வைத்து அமுக்கி உள்ளார்.
இதனை தடுக்க முடியாமல் திணறிய மூதாட்டியிடம் நகைகளை கொடுக்கும்படி அந்த மர்ம நபர் மிரட்டி உள்ளார். இந்த நிலையில், நகைகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள், என்னை விட்டு விடு என மூதாட்டி கூறியவுடன், பீரோவில் இருந்த சுமார் 25 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு மூதாட்டி அணிந்து இருந்த வளையலையும் பறித்துக் கொண்டு பின்பக்க வாசல் வழியாக மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
எப்போதும் இரவு நேரத்தில் மூதாட்டிக்கு உதவியாக இருக்க வரும் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டைச் சேர்ந்தவர்கள் கதவை நெடு நேரமாக தட்டியும் முன்பக்க கதவு திறக்கப்படாமல் இருந்த நிலையில், பின்பக்கம் வழியாக உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் உள்ளிட்டவைகள் திருடு போனதாக தெரிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நெல்லை டவுன் போலீசாரிடம் அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து தெருவிலுள்ள சிசிடிவி காட்சிகளுடன் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மர்ம நபர் ஒருவர் தனியாக வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டியிடம் சுமார் பத்து லட்சம் மதிப்பிலான 25 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் இரண்டு நாட்கள் ஆகியும் இந்த வழக்கில் துப்பு துலங்காமல் போலீசார் திணறி வருகின்றனர். மூதாட்டியின் வீட்டில் இரண்டு பெண்கள் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. எனவே அந்தப் பெண்களில் யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறையிடம் விசாரித்தபோது, “தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இதுவரை துப்பு துவங்கவில்லை. சிசிடிவி காட்சிகள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் நடைபெற்ற விசாரணை அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போலி ரயில்வே டிக்கெட் விற்று பல லட்சம் மோசடி செய்த நபர் கைது!