திருநெல்வேலி: சீவலப்பேரி அருகே குப்பகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திரம், இவரது மனைவி முத்து இருவரும் அதே பகுதியில் சலவைத் தொழில் செய்து வருகின்றனர். நேற்று (ஜூலை 12) இருவரும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக வெளியே சென்றுள்ளனர்.
வீட்டில் அவர்களது 15 வயது காது கோளாத மகள் தனியாக இருந்துள்ளார். இதையறிந்து அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும் சுரேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது புகார் அளித்தனர். ஆனால் காவலர்கள் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்யாமல் விசாரணைக்காக அழைத்துச் சென்று உடனே விட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சமுத்திரத்தின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவறிந்து சென்ற சீவலப்பேரி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் சுரேஷின் சகோதரர் ஆளுங்கட்சியில் கிளை செயலாளராக இருப்பதால் சுரேஷ் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர் என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: யானை மீது பட்டாசுகளை வீசி எறிந்த வனத்துறையினர்- விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்