தேனி: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளை கோவை, தஞ்சாவூர், பெரியகுளம், கிள்ளிகுளம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது.
இதில் 'பி' பிரிவு மண்டலத்தில் தேனி, மதுரை, கரூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 12 வேளாண் கல்லூரிகளைச் சேர்ந்த 1,200 மாணவ, மாணவியர் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வரும் 6-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் குழு விளையாட்டு போட்டிகளான கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கோ-கோ, கபடி உள்ளிட்ட 11 வகையான விளையாட்டு போட்டிகளும் தனிநபர் போட்டிகளான ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் ,உயரம் தாண்டுதல், ஓட்ட பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றது.
இந்த விளையாட்டுகள் அனைத்தும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கம் மற்றும் வெள்ளி விளையாட்டு அரங்கத்தில் இன்று 2.12.2022 முதல் 6. 12. 2022 வரை நடைபெற்று வருகிறது.
முன்னதாக விளையாட்டு போட்டிகள் துவங்கும் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்ற பின் விளையாட்டின் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து விளையாட்டு போட்டிகளை வேளாண் பல்கலைக்கழகம் பதிவாளர் தமிழ் வேந்தன் மற்றும் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பின்னர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் டோங்கடா உமேஷ், வேளாண் பல்கலைக்கழகம் பதிவாளர் தமிழ் வேந்தன் மற்றும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜாங்கம் ஆகியோர் சேர்ந்து இறகுப்பந்து ஆடி விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தனர். மண்டல அளவில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் பின்னர் தமிழ்நாடு அளவில் தோட்டக்கலை மற்றும் வேளாண் கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு