கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வெளியே வராமல் வீட்டிலேயே இருக்க அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.
இந்த நோய் தொற்றின் அபாயத்தை உணராது சிலர் பொதுவெளியில் சுற்றி வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்தும் விதமாக ட்ரோன் கேமரா மூலமாக காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேனி அல்லிநகரத்தில் உள்ள வால்கரடு பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களை ட்ரோன் கேமராவில் காவல் துறையினர் கண்காணித்தனர். கேமராவை கண்ட இளைஞர் கூட்டம் விளையாடுவதை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதில், சிலர் தங்களது முகத்தை உடைகளால் மறைத்தவாறு ஓடி மறைந்துக்கொண்டனர். மேலும் சிலர் பொறுமையாக நின்று வேடிக்கைப் பார்க்கின்றனர்.
இதே போல் உழவர்சந்தை அருகே மீறு சமுத்திரம் கண்மாய் பகுதி அருகே விளையாடிக்கொண்டிருந்தவர்களும் ட்ரோன் கேமராவை கண்டு தோட்டப்பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டனர்.
இதையும் படிங்க: குறையும் கச்சா எண்ணெய் விலை - அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை!