தேனி மாவட்டம் கீழச்சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒண்டிவீரன் - மாரியம்மாள் தம்பதி. இவர்களுக்கு ரவிக்குமார் (25), நித்யா (20), மாரிமுத்து (17) என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகனான ரவிக்குமார் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துவிட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் கோழிப் பண்ணை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது. எனவே சிகிச்சைக்காக ரவிக்குமார் சொந்த ஊர் வந்தார். நேற்றிரவு (ஜன.10) இயற்கை உபாதை கழிப்பதற்காக அவர் வெளியே சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றனர். அப்போது வீட்டின் அருகே முகம் சிதைந்த நிலையில், கொடூரமாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடந்தார்.
இதனைக் கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், தடயங்களை அழிக்கும் வகையில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் ரவிக்குமார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் காதல் விவகாரம் தொடர்பாக ஆணவப் படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் காரணமா? போன்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: யானைகவுனி கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது!