தேனி மாவட்டம் கம்பம் கிராம சாவடி தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் முருகேசன்(60). இவருக்கு இந்திரா தேவி என்ற மனைவியும், மனோஜ் (25) என்ற மகனும் உள்ளனர். பொறியியல் பட்டதாரியான மனோஜ், கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 30) அதிகாலை எழுந்து வெளியே சென்று வருகிறேன் என்று கூறிய மனோஜை, இந்த நேரம் எங்கு செல்கிறாய் காலையில் போகலாம் என்று பெற்றோர் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், அருகிலிருந்த அரிவாளை எடுத்து தந்தையை தாக்கினார்.
இதை பார்த்த தாய் இந்திராதேவி அலறவே அவரையும் தாக்கினார். பின்னர், மனோஜ் அவரது அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், காயமடைந்த முருகேசன், தனது மனைவியை அழைத்துக்கொண்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக சென்றார்.
மேலும், நடந்த சம்பவம் பற்றி கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கும், சகோதரருக்கும் முருகேசன் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக முருகேசனின் சகோதரர், காவல் துறையினர் சம்பவ இடம் சென்று பார்த்தபோது மனோஜின் அறை பூட்டியிருந்தது. பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பெல்டால் தனது கழுத்தை இறுக்கி படுக்கையிலேயே மனோஜ் இறந்து கிடந்தார்.
இதையடுத்து, அவரது உடலை மீட்ட கம்பம் தெற்கு காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மனோஜ் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அந்த விவகாரத்தால் பெற்றோரை தாக்கி, தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.