தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் போன்ற பகுதிகளில் தற்போது முதல்போக நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் மதுரை, தஞ்சாவூர், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட அறுவடை இயந்திர பணியாளர்கள் அறுவடைப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சின்னமனூர் வேம்படி பகுதியில் மதுரை தனிச்சியம் பகுதியைச் சார்ந்த கருப்பசாமி மகன் நாகர்ஜுனா(17) என்ற இளைஞர் நெல் அறுவடை இயந்திரத்தில் கிளீனராக பணிபுரிந்துள்ளார். அறுவடையின்போது வயலின் குறுக்கே சென்ற உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பியில் எதிர்பாராத விதமாக இயந்திரம் உரசியுள்ளது. இதில் வாகனத்தில் வேலை செய்து கொண்டிருந்த நாகர்ஜுனா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னமனூர் காவல் துறையினர் உயிரிழந்த நாகார்ஜுனாவின் உடலை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து நாகார்ஜுனாவின் அண்ணன் முத்துராஜ் கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி 8 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு