தேனி: பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் கட்டுமானப் பணிகளைத் துவங்கிய பொழுது, அப்பகுதியில் குடியிருந்த 54 குடும்பத்தினருக்கு பெரியகுளம் அருகே உள்ள முருகமலை பகுதியில் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலத்தில் காந்திஜி நகர் என பெயரிட்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2002ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு அப்பகுதியில் மக்கள் வீடு கட்டி குடியிருந்து வந்த நிலையில், வகை மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அப்பகுதியில் குடியிருந்து வரும் மக்கள், அரசு வழங்கிய பட்டாக்களை அவர்களது வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்து பத்திரப்பதிவு மேற்கொள்வதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அங்கே கிராம நிர்வாக அலுவலரிடம் இது குறித்த நகல் உண்மைத் தன்மை சான்றிதழ் பெற்று வருமாறு கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, எண்டப்புளி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்குமாரிடம் பட்டா உண்மைத் தன்மை சான்றிதழ் கேட்டபொழுது, ‘உங்களது பட்டா செல்லாது. அரசு பதிவேட்டில் ஏற்றம் செய்யப்படவில்லை’ என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், அரசு வழங்கிய பட்டாக்களுடன் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து, அங்கு வந்த வட்டாட்சியர் அர்ஜுனன் மற்றும் துணை வட்டாட்சியர் மகாலட்சுமி, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய பட்டாக்களை, அரசு பதிவேட்டில் பதிவேற்றம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
மேலும் இப்பிரச்னை குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த பட்டா செல்லாது என்றும், இதுவரையில் அரசு பதிவேட்டில் பதிவேற்றம் செய்யாததால் எங்கள் கிராமத்தின் காந்திஜி நகர் பகுதி பெயர் பதிவேட்டில் இல்லை எனக்கூறி, எண்டப்புளி ஊராட்சி நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் உள்ளது" என்று குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: "டிடிஎஃப் வாசன் வாகனத்தை அருங்காட்சியகத்தில் வைக்கலாம்” - வழக்கறிஞர் கூறுவது என்ன?