தேனி மாவட்டம் பரமசிவம் கோயில் தெருவில் ராஜசேகர் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு கடந்த டிசம்பர் 16ஆம் தேதி தங்கச்செயின் வாங்குவதாகக் கூறி இரண்டு பெண்கள் வந்தனர். அவர்கள் அரை மணிநேரத்திற்கும் மேலாக பல்வேறு மாடல் தங்கச்செயின்களை பார்த்தனர்.
கடைசியில் தங்கச்செயின் வாங்காமல் இரண்டு பெண்களும் கிளம்பி விட்டனர். இதையடுத்து இரண்டு சவரன் தங்கச்செயின் காணாமல் போனது கடையின் உரிமையாளருக்கு தெரியவந்தது.
அவர் போடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்தனர்.
அதில் கடைக்கு வந்த இரண்டு பெண்கள் தங்கச்செயினை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது.
தற்போது இச்சம்பவத்தில் தொடர்புடைய திண்டுக்கல் மாவட்டம் ஆவாரம்பட்டியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணை போடி காவல் துறையினர் கைது செய்தனர். அப்பெண்ணிடமிருந்து இரண்டு சவரன் தங்கச்செயினை பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட செல்வி தென்காசி அம்மன் சன்னதி பகுதியில் உள்ள நகைக்கடையில், இதேபோல் இரண்டு வளையல்களை திருடியது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: சிக்கினான் நகை திருடன்!