தேனி: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அறிஞர் அண்ணா பிறந்த நாளான இன்று (செப்.15) தொடங்கி வைக்கப்படும் என முன்னதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த தகுதி வாய்ந்த பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பெண்களுக்கு ஆயிரம் ரூபாயுக்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ பெரியசாமி, “எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டத்தை இந்த மாநிலத்தில் முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார். மகளிருக்கு உரிமைத் தொகை அளித்த ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். குடும்ப தலைவர் கூட செய்ய முடியாத காரியத்தை தமிழ்நாடு முதலமைச்சர் செய்து இருக்கிறார்.
பெண்களுக்கு திருமணம் ஆகும் போதும் என்ன மகிழ்ச்சி இருக்கிறதோ குழந்தை பெறுகின்ற போது என்ன மகிழ்ச்சி இருக்கின்றதோ அதை விட ஒரே நாளில் கோடான கோடி பெண்கள் ஒரே நாளில் மகிழ்ச்சி அடைய செய்த பெருமை முதலமைச்சரையே சேரும்” என்றார்.
பின்னர் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அமைச்சர் ஆயிரம் ரூபாய் காண காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி ஷஜிவனா கூறும் போது, “தேனி மாவட்டத்தில் 3 லட்சம் விண்ணபங்கள் பெறப்பட்டு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் விடுபட்ட பெண்கள், தகுதி இருந்தும் உரிமை தொகை கிடைக்காத பெண்கள், இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வந்தது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.. தேனி பெண்கள் குஷி; அதிகாரிகள் குழப்பம்!