தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது போடிமெட்டு மலைப்பகுதி. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் 23 பேர் வரை உயிரிழந்தனர்.
இச்சம்பவத்திற்குப் பின் தேனி மாவட்டத்தில் காட்டுத்தீ ஏற்படுவது குறையத்தொடங்கியது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கேரளாவிலிருந்து வனப்பகுதி வழியாகத் தமிழ்நாடு வந்த தொழிலாளர்களில் நால்வர் பலியாகினர்.
இந்நிலையில் போடிமெட்டு மலையில் உள்ள மணப்பெட்டி கழுதைப்பாதை வனப்பகுதியில் தற்போது காட்டுத்தீ பற்றி எரிகின்றது. சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதியில் கொளுந்துவிட்டு எரியும் இந்தக் காட்டுத்தீயினால் பல அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின.
மேலும் வன உயிரினங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அவை தங்களது வாழ்விடங்களை மாற்றும் சூழல் உருவாகியுள்ளது.
பொதுவாக பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான கோடை காலங்களில்தான் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்துவரும் சூழலில், காட்டுத்தீ ஏற்படுவது அடையாளம் தெரியாத நபர்களால்தான் என வன ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே குரங்கணி, ராசிங்காபுரம் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்து போன்று உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் வனத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கின்றனர்.
இதையும் படிங்க: கலிஃபோர்னியா காட்டுத்தீ: 72 மணி நேரத்தில் 11 ஆயிரம் மின்னல்கள்!