சில தினங்களுக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பிரிவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், பெண்களை அவதூறாகப் பேசியவர்களுக்கு எதிராகத் துடைப்பங்களையும், காலில் அணிந்திருந்த காலணிகளைக் காட்டியும், தரையில் அடித்தும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இச்சாலை மறியலால் மதுரை-தேனி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்படைந்தது. போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆடியோ வெளியிட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இதைவிட பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.