தேனி மாவட்டம், தேவாரம் மலையடிவாரப் பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 18ஆம் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. முன்னதாக முல்லைப் பெரியாற்றின் தலை மதகுப்பகுதியான லோயர்கேம்ப்பில் இருந்து தேவாரத்தில் உள்ள சுத்த கங்கை ஓடை வரை இந்தக் கால்வாய் வெட்டப்பட்டது.
போடி தாலுகா விவசாயிகள் பயனடையும் வகையில் கூவலிங்க ஆறு வரை 18ஆம் கால்வாய் நீட்டிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு கடந்த 2018ஆம் ஆண்டு சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இந்த ஆண்டு பெய்த பருவ மழையினால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து கடந்த மாதம் முல்லைப் பெரியாற்றிலிருந்து 18ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி மூன்றாவது முறையாக 18ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கான தண்ணீரை, தேவாரம் சுத்த கங்கை ஓடையிலிருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார். வினாடிக்கு 95 கனஅடி வீதம் 15 நாள்களுக்கு மொத்தம் 121 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
இதன் மூலம் உத்தமபாளையம், போடி தாலுகாக்களில் உள்ள 585 கிணறுகளில் நிலத்தடி நீர் செரிவூட்டப்படுவதின் மூலம் 3848.55 ஏக்கர் நிலங்களும், ஏழு குளங்களின் கீழுள்ள 946.16 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 4794.71 ஏக்கர் நிலங்கள் பாசனவசதியைப் பெறும்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன், பொதுப்பணித்துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு!