தென்மேற்கு பருவமழை கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிவருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்துவருவதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நீர்மட்டம் 115.75 அடியாக இருந்த நிலையில், தற்போது பெய்துவரும் தொடர் மழையால் 3 நாள்களில் 8 அடி வரை உயர்ந்து இன்று 123.20 அடியை எட்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பு 3,262 மி.கனஅடியாக உள்ளது. நீர் வரத்து 6 ஆயிரத்து 956 கனஅடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து தமிழ்நாடு பகுதிகளுக்கு திறக்கப்படும் நீரின் அளவும் உயர்த்தப்பட்டு, விநாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர், சுருளிப்பட்டி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் உயர்ந்துவரும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவைக் குறைத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடியைத் தேக்கிய பின் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என தேனி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.