பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வடுகப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண்-197 மற்றும் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண்-67 ஆகிய இரு வாக்குச் சாவடிகளுக்கும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருவள்ளூர் மாவட்டம், லட்சுமிபுரம் சேமிப்புக் கிடங்கில் இருந்து 20 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரம் என 50 மின்னணு இயந்திரங்கள், காவல்துறையினரின் பாதுகாப்புடன் தேனிக்கு கொண்டுவரப்பட்டன. இந்த இயந்திரங்கள் திமுக, காங்கிரஸ், அதிமுக, அமமுக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பல்லவி பல்தேவ் ஆகியோரின் முன்னிலையில் சரிபாரக்கப்பட்டு தேனி வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு செல்லும் பணி நடைபெற்றது.
அப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் 'மாதிரி' பெயர்கள், சின்னங்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் அந்த பெயர், சின்னத்திற்கு நேராக பட்டன் அழுத்தினால், ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் தேனி தொகுதி வேட்பாளர்களின் பெயர் இடம்பெற்ற ரசீது வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த அரசியல் கட்சியினர் தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இயந்திரத்தில் தேனி வேட்பாளர்கள் புகைப்படம் எப்படி வந்தது என்று அலுவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து கட்சி பிரதிநிதிகளுடன் பேசிய பெரியகுளம் கோட்டாட்சியர் ஜெயப்பிரீத்தா, தேர்தல் முடிந்த பின், தேனியில் இருந்து திருவள்ளூருக்கு அனுப்பப்பட்ட இயந்திரங்களே, தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தேனி தொகுதி வேட்பாளர்களின் விபரங்கள் அழிக்கப்படாமலே திரும்பி வந்துள்ளது. பிற்பகலுக்குப் பிறகு 'பெல்' நிறுவன பொறியாளர்கள் வரவழைத்து, உங்கள் முன்னால் விவிபேட்டில் உள்ள விபரங்களை அழித்த பின்புதான் இயந்திரங்களை இருப்பு வைப்போம் என்று தேர்தல் அலுவலர்கள் விளக்கம் அளித்ததால் அனைத்து கட்சியினரும் அமைதி காத்தனர்.