தமிழகத்தில் வருகின்ற 18ஆம் தேதி மக்களவைக்கான பொதுத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஜனநாயகக் கடமையான வாக்குரிமையை பொதுமக்கள் அனைவரும் செலுத்திடும் வகையில், தேர்தல் ஆணையத்தால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுத்திடும் வகையில் ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பல்லவி பல்தேவ் இன்று பறக்க விட்டார்.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை சந்திப்பில் இந்த ராட்சத பலூன் பறக்க விடப்படுள்ளது.
சுமார் 15 அடி சுற்றளவு கொண்ட இந்த பலூனில், 'ஏப்ரல் 18 தேர்தல் நாள்', '100 சதவீத ஓட்டு இந்தியர்களின் பெருமை' உள்ளிட்ட வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவிக்கையில், நகரின் மையப் பகுதியில் சுமார் 55 அடி உயரத்தில் பறக்க விடப்பட்டுள்ள பலூன் அனைவரின் பார்வையில் படுமாறு அமைந்துள்ளது. இதன்மூலம் பொதுமக்களிடம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்திடும் விழிப்புணர்வு உண்டாகும். மேலும், இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.