தேனி: போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி கிராமத்தின் அருகே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மதுபானங்கள் விற்பனை விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்பதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மதுபானம் வாங்க வந்த நபர் ஒருவர் அவர் விரும்பிய மதுபானத்தின் விலையினை கேட்ட பொழுது கடையில் உள்ள விற்பனையாளர் விற்பனை விலையைக் காட்டிலும் 25 ரூபாய் அதிகமாக கேட்டுள்ளார். இதுகுறித்து மதுபானம் வாங்க வந்தவர் காரணம் கேட்டபொழுது உரிய பதில் தராமல் ஆணவமாக பதில் கூறியுள்ளார்.
அப்போதும் அவரை விடாமல் வாடிக்கையாளர் கேள்வி எழுப்பியதற்கு, 'உங்களுக்கு சந்தேகம் என்றால் டோல் ஃப்ரீ எண்ணை அழையுங்கள் என்றும் கூறி விற்பனையாளர்' பதில் கூற மறுத்துள்ளார். மேலும் இதுகுறித்து 'யாரிடம் வேண்டுமானாலும் கூறுங்கள்' என ஆணவமாக கூறியதுடன் அருகில் உள்ள நபர் ஒருவரை உதவிக்கு அழைத்துள்ளார்.
மதுபானம் வாங்குபவர்களிடம் பாட்டிலுக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை என ரகத்திற்குத் தகுந்தவாறு விலையை அதிகம் வைத்து விற்பது மட்டுமின்றி, வாடிக்கையாளர்களிடம் யாரிடமும் போய் கூறுங்கள் என்று ஆணவமாக கூறியுள்ளார். இந்நிலையில், ஆணவமாக பேசிய டாஸ்மாக் விற்பனையாளரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் பகிரங்கமாகவே டாஸ்மாக் விற்பனையாளர்கள் அதிகமாக ஐந்து ரூபாய், பத்து ரூபாய் பணம் எடுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியை எழுப்பிய பொதுமக்கள், இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிமெண்ட் வாங்குவது போல் நடித்து பலே திருட்டு.. சிசிடிவி வீடியோ வெளியீடு!