தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது . மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள இந்த அணை 126 அடி நீர்மட்ட உயரம் கொண்டுள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் தற்போது 122.01 அடியாக உயர்ந்துள்ளது.
பெரியகுளம் பகுதி குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக அணைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அணையின் நீர் வெளியேற்றப் பகுதியின் மதகில் இளைஞர்கள் சிலர் சாகசம் செய்து குளிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆபத்தான பகுதியின் பக்கவாட்டில் நின்றிருக்கும் சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சுமார் 10அடி நீளமுள்ள சறுக்கில் சறுக்கி விளையாடுகின்றனர்.
அணையின் நீர் திறப்பு பகுதியான மதகு பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் அந்த பகுதியில் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், பொதுப்பணித் துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி ஆபத்தான இடங்களில் இளைஞர்கள் குளித்து விளையாடுவதால் ஆபத்தான சூழல் நிலவுகிறது.
எனவே ஆபத்தான இடங்களில் குளித்து உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன், அணைப் பகுதிகளில் பொதுப்பணித் துறையினர் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரு பிளேட் பாம்புக்கறி பார்சல்: பாம்புக்கறி தின்னும் இளைஞர்கள்!