தேனி: செஸ் போர்டு ஒலிம்பியாட் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பிரம்மாண்டமாக 44 தர்ப்பூசணி பழங்களினால் உருவாக்கப்பட்ட செஸ் போர்டு அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆக 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் (Chess Olympiad) போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பள்ளி மாணவ மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்பொருட்டு தேனி மாவட்டத்தில் காய்கறிகள், பழங்களைக் கொண்டு சிற்ப கலைஞர் இளஞ்செழியன் 8 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட செஸ் போர்டு (Chess Board) ஒன்றை உருவாக்கியுள்ளார்.
முட்டைக்கோசுகளால் ஆன இந்த செஸ் போர்டில், செஸ் போட்டியின் போது நகர்த்தும் காய்களாக தர்ப்பூசணி பழங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக, 32 தர்ப்பூசணி பழங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், இந்த செஸ் போட்டிக்கான இலச்சினையும் (Logo) தர்ப்பூசணி பழம்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேனி அல்லி நகரத்தில், இந்த பிரம்மாண்ட பழங்கள் காய்கறிகளான செஸ் போர்டில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் விளையாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த செஸ் போர்டு பள்ளி மாணவ-மாணவிகள் பார்க்கும் விதமாக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவியர்கள் ஆர்வமுடன் கண்டு களித்து வருகின்றனர். இன்றும் நாளையும் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: தனியார் பள்ளி வாகனங்களில் இது நம்ம சென்னை, நம்ம செஸ் ஸ்டிக்கர்