தேனி மாவட்டம் அருகே உள்ள வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இந்தாண்டுக்கான சித்திரைத் திருவிழா மே 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும், அம்மனுக்கு விரதம் இருந்த பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரங்கண் பானை, கரும்புத்தொட்டில், சேத்தாண்டி வேடம் என தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
இத்திருவிழாவின், முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்திற்கு முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர். இதனையடுத்து, பக்தர்களின் கரகோஷத்துடன் தேர், நிலையில் இருந்து கிழக்கு ரத வீதியில் வந்தடைந்தது. சனிக்கிழமை தெற்கு ரத வீதிக்கு வந்து, பின்னர் மறுநாள் தேரடி வீதி வழியாக தேர் நிலையை வந்தடையும்.
இந்த சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.