திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் சுஜித் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து மூடுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. இதன் தொடர்ச்சியாக பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தொடக்கி வைத்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜல்லிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஏ.மீனாட்சிபுரம் கிராமத்தில் இத்திட்டத்திற்கான செயல்முறை விளக்கம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அளிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் தங்களது நிலங்களில் உள்ள பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றம் செய்யலாம். திறந்தவெளி கிணறை மாற்றம் செய்வதற்கு ரூ.20,000, ஆழ்துளைக் கிணறை மாற்றம் செய்வதற்கு ரூ.22,000 நிதி உதவி வழங்கப்படும். இதற்காக 5 அடி முதல் 10 அடி அகலத்தில் குழி ஏற்படுத்தி, பெரிய கற்கள், கூழாங்கற்கள், மணல் கொண்டு நீர் வடிகட்டும் படுகை மூலம் மழை நீரை குழாய் வழியாக ஆழ்துளைக் கிணற்றிலும், திறந்தவெளிக் கிணற்றிலும் செலுத்தி சேகரிக்கலாம்.
இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், "மழைநீர் முழுமையாக அறுவடை செய்து நீர் வற்றிய ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகளில் செலுத்தி நீர் செறிவூட்டல் செய்தால், நீர் ஊற்றுக்கண் மற்றும் பாறைகளுக்கு இடையே உள்ள நீர் தாங்கிகளில் மழைநீர் சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயரக்கூடும். அதோடு பயன்பாடில்லாமல் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் ஆபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாக்க இயலும்.
இவ்வாறு செறிவூட்டப்பட்ட ஆழ்துளை மற்றும் திறந்தவெளிக் கிணறுகளில் சேமிக்கப்படும் நீர் குறைவான உவர்ப்புத் தன்மையுடன் இருக்கின்றது. எனவே அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில், தங்களது விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறு அல்லது திறந்தவெளி கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றம் செய்து நிலத்தடி நீர் மட்ட உயர்வு மற்றும் விபத்து தவிர்த்து இரட்டிப்பு பலன் பெற சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஆழ்துளைக் கிணறு விபத்துகள் என்று தணியுமோ! - ஹரியானாவில் சிறுமி மரணம்