நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதாக மாணவர் உதித் சூர்யா என்பவர் மீது புகார் எழுந்தது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அமைத்த விசாரணைக் கமிட்டியில் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து மாணவர் உதித்சூர்யா தனது பெற்றோருடன் தலைமறைவாகினார். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தனிப்படை காவலர்கள் தலைமறைவாக இருந்த மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன் - கயல்விழி ஆகியோரை ஆந்திர மாநிலம் கீழ் திருப்பதியில் வைத்து கடந்த 25ஆம் தேதி கைது செய்தனர்.
பின்னர், தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து கடந்த 26ஆம் தேதி மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, தந்தை - மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் பன்னீர்செல்வம், உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தனக்கு ஜாமின் வழங்கும்படி உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி வரும் அக்டோபர் 3ஆம் தேதி வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக உதித் சூர்யா மீது க.விலக்கு காவல்நிலையத்தில் ஆள்மாறாட்டம் செய்தது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. உதித் சூர்யா தலைமறைவாக இருந்த சமயத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அந்த வழக்கிலிருந்து முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி உதித் சூர்யாவை சிபிசிஐடியினர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.