தேனி: தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அரங்கில் சிறப்புத் திட்டச் செயலாக்கம் துறை சார்பில், அரசு அலுவலர்களுடன் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், தேனி மாவட்டத்தில் செயல்படும் திட்டங்கள் குறித்தும், திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அரசு அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சிறப்புத் திட்டச் செயலாக்க துறையின் சார்பில் மாவட்டம்தோறும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்களுடன் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம்.
தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சில திட்டங்களில் தொய்வு இருக்கின்றது. அது குறித்து ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மாநில உரிமையை என்றும் விட்டுக் கொடுக்காது, சட்டப்படி போராடுவோம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எந்தவொரு வன்முறையையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது. ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று கண்டனம் தெரிவித்தார்.
நீட் தேர்வு ரத்து செய்யக் கோரும் போராட்டத்திற்கு அதிமுகவும் கைகோர்க்க வேண்டும் என கூறியது தொடர்பான கேள்விக்கு, "நீட் தேர்வை அரசியலாக மாற்றாதீர்கள். இது திமுகவின் தனிப்பட்ட பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் பிரச்னை.
நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவர்கள் யாரும் எந்த இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் மாணவர்கள். அவர்களின் மருத்துவ கல்விக்காகத்தான் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும், இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அதிமுக மட்டும் அல்ல, அனைத்து இயக்கங்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் அந்த பெருமையை அதிமுகவே எடுத்துக் கொள்ளட்டும். எங்களுக்கு நீட் தேர்வு ரத்து செய்தால் போதும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: FEMI9 என்ற சானிடரி நாப்கின் தொழிலை தொடங்கிய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா!