கேரள மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இங்கு கார்த்திகை மாதம் முதல் தை மாதத்தில் வருகின்ற மகரஜோதி வரை தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும்.
கோவிலுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சென்று வருகின்றனர். இங்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து செல்கின்றனர்.
இதன் முக்கிய சாலைவழிப்பாதையாக தேனி மாவட்டம் கம்பம் - குமுளி மலைச்சாலைத் திகழ்கிறது. இந்நிலையில் சபரிமலை சீசனையொட்டி கோவிலுக்குச் சென்று திரும்பும் பக்தர்களுக்கு தமிழக – கேரள எல்லையான குமுளியில் செய்ய வேண்டிய அடிப்படை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேனி - இடுக்கி மாவட்ட காவல்துறையினரின் ஆலோசனைக்கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில், பக்தர்கள் சிரமமின்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும், போக்குவரத்து இடையூறு இல்லாமல் சென்று திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக மாற்றப்பட்டு ஒருவழிப்பாதை அமல்படுத்துவது குறித்தும், குமுளியில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவதை தவிர்ப்பதற்கான தீர்வு குறித்தும் இருமாநில காவல்துறை அலுவலர்கள் கலந்து பேசினர்.
இதுதவிர, தமிழக - கேரள எல்லையோரப்பகுதிகள் வழியாக அனுமதியின்றி போலி மது, கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்துவதை தடுக்கும் விதமாக இருமாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடியில் சோதனைகளை பலப்படுத்துவது குறித்தும், இரு மாநில காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன.
மேலும் தமிழகத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டு கேரளாவுக்குச் செல்பவர்களை கேரள காவல்துறையினரின் உதவியுடன் பிடிப்பது, கேரளாவில் குற்றம் செய்துவிட்டு தமிழகம் வருபவர்களை தமிழக காவல்துறையினரின் உதவியுடன் பிடித்து ஒப்படைப்பது குறித்தும் இரு மாநில காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிகழ்வில், தமிழகம் சார்பாக தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார், உத்தமபாளையம் காவல் கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு, ஆய்வாளர்கள் கூடலூர் சுரேஷ்குமார், போடி ஷாஜகான், கேரளா மாநிலம் சார்பாக இடுக்கி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாறன், கட்டப்பனை காவல் கண்காணிப்பாளர் ராஜமோகன், குமுளி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!