தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாயின் மலையடிவாரப் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் திருடப்படுவதாக மாவட்ட கனிம வளத் துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து கணவாய் மலைப்பகுதியில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, அங்கு டிப்பர் லாரிகளில் சிலர் மணல் திருடிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது இருவர் தப்பியோடினர். மற்ற இருவர் காவல் துறையினர் பிடித்தனர். விசாரணையில், மதுரை - போடி அகல ரயில்பாதை பணிக்காக மணல் அள்ளுவதாக அவர்கள் கூறினர். ஆனால் அங்கு மணல் எடுப்பதற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படாதது தெரியவந்தது.
இதனையடுத்து ரயில்வே பணிக்கு என்று கூறி மணல் திருட்டில் ஈடுபட்ட திம்மரசநாயக்கனூரைச் சேர்ந்த கண்ணன், ஜெயக்கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர் மணல் அள்ளப் பயன்படுத்திய நான்கு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, தப்பியோடிய இரண்டு ஓட்டுநர்களையும் தேடிவருகின்றனர். மேலும் இந்த மண் திருட்டில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.