தேனி: பெரியகுளம் அருகே உள்ள போடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகமலை ஊராட்சி கிராம பஞ்சாயத்து உள்ளது. மலைக்கிராமங்களான ஊரடி, கருங்கல்பாறை, பட்டூர், படப்பம்பூர், சொக்கநிலை,ஊத்துக்காடு, கண்ணகரை, குறவன் குழி, சின்ன மூங்கில், பெரிய மூங்கில், கரும்பாறை, உள்ளிட்ட 14 மலை கிராமங்கள் இந்த ஊராட்சிக்கு உட்பட்டுள்ள நிலையில், இங்கு ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மலைவாழ் மக்களும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தேனி மாவட்ட வனத்துறையினர், அரசு சார்பில் ஒவ்வொரு மலை கிராமமாகச் சென்று மலைவாழ் கிராம மக்களை வெளியேற்றுவதற்காக நடவடிக்கையின் முதல் கட்டமாக நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் வாழும் கிராம மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்ததோடு, மலைப் பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது மட்டுமின்றி மக்களின் எதிர்ப்பை மீறி, வெளியேற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் தங்களை நாடு கடத்துங்கள், அல்லது அனைவரையும் சுட்டுக் கொள்ளுங்கள் என மலைவாழ் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட 14 மலை கிராம மக்களின் ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைப்பகுதியில் இன்று(ஜூன் 18) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கையைக் கைவிடாவிட்டால் மலை கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போடி வட்டாசியர் அலுவலகம் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டமும், பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதற்கு தீர்வு காணாவிட்டால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரிடம் தங்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அகமலை கிராமவாசி சன்னாசி கூறுகையில், “இங்கு இருக்கும் அனைத்து விவசாயிகளும் மூன்று தலைமுறையாக இந்த மலையில் இருக்கிறோம். வனத்துறையினர் திடீரென இப்படி நோட்டீஸ் கொடுப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனையைக் கொடுக்கிறது. மேலும் இந்த செயல் எங்களின் வாழ்வாதாரத்தை அதிகளவில் பாதிக்கும். எங்களுக்கு மலை விவசாயம் தவிர்த்து வேரேதும் தெரியாது.
வனத்துறையினரின் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கை குறித்து வருவாய் ஆட்சியர் மற்றும் ஊராட்சிமன்ற தலைவரிடம் தெரிவிக்க உள்ளோம். நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் ஜூன் 29 அல்லது 30ஆம் தேதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்கவுள்ளோம். மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசால் எங்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை என அனைத்தையும் கொடுத்துவிட்டு 14 ஊராட்சி மலைக்கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாக” தெரிவித்தார்.
மேலும் இது குறித்து மற்றொரு கிராமவாசியான சுப்பிரமணி கூறுகையில்,“மூன்று தலைமுறையாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். இந்த மலைகளோடு எங்கள் வாழ்க்கை ஒன்றியுள்ளது. இந்த மலையை விட்டால் எங்களுக்கு எந்த தொழிலும் தெரியாது. இன்று வனத்துறையினர் வைத்திருக்கும் அனைத்து பதிவுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த மலைப்பகுதியின் பெயர் மற்றும் விவரங்கள் நாங்கள் வைத்தது.
முன்னோர் காலத்திலிருந்து நாங்கள் இங்கு இருப்பதால், பல மலைப் பகுதிகளுக்கு நாங்கள் தான் பெயர் வைத்துள்ளோம், அதைத் தான் இன்று வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். எங்களை தற்போது வெளியேறச் சொல்வது எங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும். எனவே தமிழக அரசு இதில் விரைந்து தலையிட்டு நடுநிலையாக நின்று தீர்ப்பளிக்க வேண்டும். இல்லை வெளிநாடுகளிலுள்ள மலைப்பகுதிகளுக்கு எங்களை நாடு கடத்துங்கள். தமிழக மண்ணில் பிறந்து இவ்வாறு விரட்டி அடிப்பதற்கு நாங்கள் அகதிகளாகக் கூட பிழைத்துக் கொள்கிறோம்” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுப்பொலிவுடன் வேடந்தாங்கல் சரணாலயம் அமைக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்