அஇஅதிமுக நிறுவனத் தலைவரும், மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாள் இன்று (ஜன. 17) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக இன்று (ஜன. 17) காலை முதலே அதிமுகவினர் ஏராளமானோர் குவியத் தொடங்கினர்.
ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக தேவராட்டத்துடன் அதிமுகவினர் காத்திருக்கையில் அவ்வழியாக தனது கட்சி அலுவலகத்திற்கு சென்ற அமமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமாரின் காரை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
பின்னர், அங்கிருந்த ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்ககிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் சமாதானம் செய்து, அமமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமாரின் காரை அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு வந்த தேனி எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் தனது ஆதரவாளர்களுடன் எம்ஜிஆரின் திருவுருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அதிமுகவினருக்கு இனிப்புகள் வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த அமமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார், எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் காரணமாக ஆண்டிபட்டியின் முக்கிய பகுதியான மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது. அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் செல்வதில்கூட சிரமம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இதையும் படிங்க...ஏழைகளுக்காக வாழ்வையே அர்ப்பணித்தவர் எம்ஜிஆர் - மோடி புகழாரம்