தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. தேனியைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு இந்த அருவியானது சிறந்த சுற்றுலாத் தலமாகவும், புண்ணியத் தலமாகவும் விளங்குகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
ஆண்டின் எல்லா விசேஷ நாட்களிலும் இங்குள்ள கோயில்களில் சிறப்புப் பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். இதையடுத்து, ஹைவேவிஸ் மலையில் உள்ள தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருவதால், ஆண்டின் எல்லா நாட்களிலும் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும்.
தற்போது அருவியின் நீர்பிடிப்புப் பகுதிகளான மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும், கன மழையினால் சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிப்பதற்கு நேற்று முதல் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், தண்ணீரின் அளவு குறைந்ததும் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: "இது பைக்காராவா... நயாகராவா" - அருவியைக் கண்டு மகிழும் சுற்றுலாப் பயணிகள்!