தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் உள்ளது முத்துமாரியம்மன் கோயில். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்நிலையில் இந்தாண்டிற்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதற்கிடையில், திருவிழாவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், இதன் காரணமாக விழா நடத்தவிடாமல் சிலர் இடையூறு ஏற்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இது குறித்து காவல்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.