தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி மகாராஜன் மற்றும் சின்னச்சாமி ஆகியோருக்கு இடையேயான நிலம் குறித்த வழக்கு விசாரணையின்போது மகாராஜனுக்கு ஆதரவாக வழக்கறிஞர் புகழேந்தி வாதிட்டார். அப்போது எதிர் மனுதாரரின் சாட்சியான முருகன் என்பவரை குறுக்கு விசாரணை செய்தபோது நீதிபதி முன்பாகவே வழக்கறிஞர் புகழேந்தியை, முருகன் மிரட்டினார். இதனை நீதிபதி கண்டித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் வளாகத்தில் எதிர் மனுதாரர் சின்னச்சாமியும், வழக்கறிஞர் புகழேந்திக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிபதியிடம் முறையிட்டனர். அப்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர். ஆனால் இன்று வரை கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறி வழக்கறிஞர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் சாலை மறியல், உண்ணாவிரதம் மற்றும் நீதிமன்ற புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்றும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பாக திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பெரியகுளம் தென்கரை காவல்துறையை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.