தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் 8 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இருந்து வருகின்ற நீரானது மூலிகைத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகளவில் வந்து குளித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் ஜனவரி 28ஆம் தேதி அருவியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குளிப்பதற்கு வனத் துறையினர் தடை விதித்தனர்.
இதைத் தொடர்ந்து, கோடையில் பெய்த மழையால் கடந்த சில தினங்களாக அருவிக்கு நீர்வரத்து அதிகமானதால், மக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நீர்வரத்து சீரானதால், கடந்த 85 நாள்களாக நீடித்த தடை இன்று முதல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் காலை முதலே அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குவியத்தொடங்கினர். கோடை விடுமுறை என்பதால் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர்.