தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் காட்டுராஜா. திமுக பிரமுகரான இவரது மனைவி ரேணுகா (38) கம்பம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார்.
தொழில் நிமித்தமாக வங்கி, தனிநபர்களிடம் காட்டுராஜா கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் வட்டி அதிகரிக்கத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் தினசரி நெருக்கடி கொடுத்துவந்ததாகத் தெரிகிறது. இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன் நீதிமன்றத்தின் மூலம் காட்டுராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கடன் கொடுத்தவர்கள் அசல், வட்டித்தொகையைக் கேட்டு அடிக்கடி காட்டுராஜா வீட்டில் வந்து தொடர்ந்து கொலை மிரட்டல்விடுத்து, ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த காட்டு ராஜாவின் மனைவி ரேணுகா, அவரது தாயார் பவுன்தாய் இருவரும் நேற்று (டிச. 10) விவசாய வேலைக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விஷம் குடித்து மயங்கி கீழே விழுந்த தாய், மகள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர்களை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து ராயப்பன்பட்டி காவல் துறையினர் நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க... போதைமருந்துக்கு பதில் கஞ்சா.. பண்டமாற்று முறை செய்த மருத்துவர் கைது