தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாகப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. இதனைத் தொடர்ந்து மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. அதில் குறிப்பாக கூடலூர், உத்தமபாளையம், மூலவைகை, பெரியகுளம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இந்நிலையில் தொடர் மழையால் பெரியகுளம் அருகிலுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அணையின் முழு நீர்மட்ட அளவான 126.28 அடியை எட்டி நீர் நிரம்பிவழிகிறது.
அணையின் நீர் இருப்பு 100.55 மி. கனஅடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 298 கனஅடியாக உள்ள நிலையில், விநாடிக்கு 139 கனநீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட வராக நதிக்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றின் கரையை கடக்கவோ, குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ செல்ல வேண்டாம் என பொதுப்பணித் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எனினும் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் நிரம்பியுள்ளதால் பெரியகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.