கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையானது தமிழ்நாட்டின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு முக்கியமான நீராதாரமாக திகழ்ந்துவருகிறது.
இந்த அணையில் நீர்தேக்குவதில் தொடர்ந்து தமிழ்நாடு, கேரள அரசு இடையே முரண்பாடு இருந்துவந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டு, அணையைக் காண்காணிக்க மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையில் மூவர் குழுவை நியமித்தது.
இக்குழுவினர் ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பராமரிப்புப் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவர். கடைசியாக இக்குழு 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி அணையில் ஆய்வு மேற்கொண்டது.
இந்நிலையில் தற்போது ஜூன் 6ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், இன்று காலை வல்லக்கடவு பாதை வழியாக அணைக்கு வந்த மூவர் குழுவினர் பெரியாறு அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
இதில் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கசிவு நீர், மழை அளவு, அணை பாதுகாப்பு, அணையின் உறுதித் தன்மை குறித்தும் மூவர் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். இதையடுத்து இன்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் மழைக்காலத்தில் அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதனிடையே பெரியாறு அணைக்குச் செல்லும் வல்லக்கடவு வனப்பாதையை சீரமைப்பது, அணைப் பகுதியில் 2000ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுப்பது, பேபி அணையைப் பலப்படுத்திய பின் 152 அடி வரை நீர்தேக்க நடவடிக்கை எடுப்பது, கடந்த நான்கு ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு தேக்கடியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் தமிழன்னை படகை இயக்க அனுமதி வழங்குவது போன்ற கோரிக்கைகள் இக்குழுவில் முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தமிழ்நாடு விவசாயிகள் உள்ளனர்.