தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றதுவந்தன. மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திய இக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் சரவண தெய்வேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மணியாரம்பட்டி விலக்கு அருகே சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள வி. குரும்பப்பட்டியைச் சேர்ந்த முத்தையா மகன் காளியப்பன் (27) என்றும் ஆண்டிபட்டி பகுதிகளில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஜூலை மாதம் முதல் அவர் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 40 பவுன் நகைகளையும் காவல் துறையினர் பதிவுசெய்தனர். பின்னர் காளியப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: டிராவல்ஸ் நிறுவன மோசடி - தம்பதியினர் கைது!