தேனி: கூடலூர் முத்து ஐயர் தெரு பகுதியைச் சார்ந்தவர் அய்யனார் மகன் நாகேந்திரன் (27). இவர் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி தேவக்கனி (23). இருவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அதே கூடலூர் புதூர் பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர் பிரகாஷ், இவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது கூலி தொழிலாளியாக சொந்த ஊரில் வேலை பார்த்து வருகிறார்.
நாகேந்திரன் மற்றும் பிரகாஷ் இருவரும் நண்பர்கள் ஆவார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மலேசியாவில் இருந்து பிரகாஷ் வந்திருந்த போது நாகேந்திரனிடம் லேப்டாப்பை, பிரகாஷ் வாங்கிச் சென்று உள்ளார். பின்னர் பலமுறை நாகேந்திரன் கேட்டும் லேப்டாப்பை கொடுக்காமல் பிரகாஷ் தொடர்ந்து இழுத்து வந்ததாகவும், பின்னர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு லேப்டாப்பை கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரகாஷ், நாகேந்திரனின் இருசக்கர வாகனத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பாக வாங்கிக்கொண்டு வெளியே சென்று விட்டு வரும் போது இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி வாகனத்தின் சில பாகங்கள் உடைந்து விட்டதாகவும், அதனை மாற்றி தருமாறு தொடர்ந்து பிரகாஷிடம் நாகேந்திரன் கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே பல்வேறு மனக்கசப்புகள் ஏற்பட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 18) நாகேந்திரனுக்கு பிறந்தநாள் தினமாகும். இதனை அடுத்து நாகேந்திரன் தனது நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் நள்ளிரவில் பிரகாஷ் நாகேந்திரனுக்கு போன் செய்து அவரை வீட்டை விட்டு வெளியே வருமாறு கூப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் போலீஸ் ஸ்டிக்கரை ஒட்டி காரில் ஊர்வலம்.. கொத்தாக சிக்கிய ரவுடிக் கும்பல்!
இந்நிலையில் நாகேந்திரன் பிரகாஷை பார்ப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். நாகேந்திரன் வெளியே சென்ற சிறிது நேரம் கழித்து தெருவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அவரது மனைவி தேவகனி வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் அருகே பிரகாஷ் அரிவாளால் நாகேந்திரனை வெட்டிவிட்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேவகனி, நாகேந்திரன் அருகே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது அவர் இறந்து போனது தெரியவந்துள்ளது.இதனை அடுத்து இத்தகவல் கூடலூர் வடக்கு காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கூடலூர் வடக்கு காவல் துறையினர் விரைந்து வந்துள்ளனர். காவல்துறையினர் இறந்த நிலையில் கிடந்த நாகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் நாகேந்திரனின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகேந்திரனை கொலை செய்த பிரகாஷ் தானாகவே முன்வந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். பிரகாஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கூடலூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பனை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கோவில்பட்டியில் பட்டியலின மாணவரை வீட்டிற்கு சென்று தாக்கிய விவகாரம்- 5 போ் கைது..